மகளிருக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பாஜக பொறுத்துக்கொள்ளாது எனவும், கர்நாடக அரசு விரைவில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம்(JDS) கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் உலா வரும் அந்த ஆபாச வீடியோக்களில் சில பெண் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். இதனால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து பாஜகவின் தலைவர்களும் மௌனம் காத்து வருகின்றனர்.
மத சார்பற்ற ஜனதா தளம்(JDS) கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதால், பாஜக பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் அவரை கண்டிக்காமல் இருக்குமோ என்ற கருத்து பரவிவந்த நிலையில், அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி அமித்ஷா ஏன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறார்.., நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது கர்நாடக மாநில அரசு தான். காங்கிரஸ் கட்சி தான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்கிறது, ஆகவே பிரியங்கா காந்தி கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
மகளிருக்கு ஆதரவாக எப்போது பாஜக அரசு துணை நிற்கும் எனவும், மகளிருக்கு எதிராக குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத சார்பற்ற ஜனதா தளம்(JDS) கட்சி பிரஜ்வால் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், இன்று அவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பாஜக ஆதரவு அளிக்காது எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் எனவும், விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும்உள்துறை அமைச்சகர் அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.