மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ஆன்மீக வியாதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ளார்.. ரூ.70.27 கோடி செலவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர், ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் “ திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு உள்ளது.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சொத்துக்களை கட்டிக்காத்தது திமுக தான்.. மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது.. நெல் உற்பத்தியில் தமிழகத்திலேயே 3-வது மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது.. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 13 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது..
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தமிழக அரசு ஏற்படுத்தி தரும்.. கிரிவலப் பாதையை பராமரிப்பதில் அறநிலையத்துறையுடன் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்படும்.. மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இது தெரியாது.. ஏனென்றால், அவர்கள் உண்மையான் ஆன்மீக வாதிகள் அல்ல.. அவர்கள் ஆன்மீக வியாதிகள்.. ஆன்மீக போலிகள்.. பொய்யர்கள், புரட்டர்களின் பேச்சுகளை பற்றி நான் கவலைப்படுவதில்லை.. எனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம்.. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற உங்களில் ஒருவனாக உழைப்பேன்.. அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன்..” என்று தெரிவித்தார்..