ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதேபோல், மாவட்ட அளவில் மாவட்ட தலைவர்கள், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
இதையடுத்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில், எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் காவல்துறையினருக்கு அவசியம் விடுமுறை தேவை என்றால் மட்டுமே விடுப்பு அளிக்கபடும் என்றும் அவசியமின்றி விடுப்பு எடுக்கும் காவலர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு விடுமுறை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.