தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் பசுவந்தனை சில்லாங் குளத்தில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையில் அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் தரவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவி உயிரிழந்த அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல் சூப்பிரெண்டு பாலாஜி சரவணன் நேரில் விசாரணை செய்தனர். கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜும் ஆய்வு செய்தார். அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.