கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் பூப்பெய்த மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூப்பெய்தல், மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. பருவ வயதை அடையும்போது பெண்ணுக்கு ஏற்படும் மாற்றம் தான் அது. ஆனால், மாதவிடாய் என்பதை இன்றளவும் ஒரு சிலர் தீட்டாகப் பார்க்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்த சமுதாயமாக மாறினாலும், இந்த விஷயத்தில் பலரும் பிற்போக்கு சிந்தனையுடனேயே செயல்படுகின்றனர்.
இந்நிலையில் தான், கோவையில் தனியார் பள்ளியில் பூப்பெய்த மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 8ஆம் வகுப்பை படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மாணவரி ஒருவர், ஏப்ரல் 5ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார்.
இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக மாணவி வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. அவரை வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். சிறுமியின் தாய் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.