அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு” வரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000 (மாதந்தோறும் ரூ.1,000) வழங்கப்படும். 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்படும்.
முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்களும் இடம் பெறும். முதல் தாள் காலை 10 – 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 – 4 மணி வரையும் நடைபெறும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி, டிசம்பர் 9ஆம் தேதிக்குள் மாணவர்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.