தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20ம் தேதி தான் கடைசி நாள், மேலும் தேர்வான மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும்.
கடந்த 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு (CBSE/ICSE- உட்பட) நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையிலுள்ள தமிழ்பாடத்திட்டங்களின் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படும்.
அதன்படி பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் (CBSE/ICSE-உட்பட) விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 20ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.