சென்னையில் கடந்த 7ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் நீதிபதி, ”பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். “பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்புடையது அல்ல.
அவரது வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. வெறுப்பு பேச்சுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இதுபோல பேசியுள்ளார். எனவே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்கும் வகையில் இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.