வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தர போகிறார் என்பது குறித்து அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் நெல்சனுக்கு மாபெரும் வெற்றிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் டார்க் காமெடி மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன், விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் தோல்வியை சந்தித்தனர். இதன் மூலம் நெட்டிசன்களின் விமர்சர்னங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயிலர் படத்தில் காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் இறங்கி செய்துவிட்டார் நெல்சன்.
இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் ஜெயிலர் படம் பார்த்து ரசித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என்றும் அடுத்ததாக லால் சலாம் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே மக்கள் கொடுத்தது என்றார். இனி அந்த பட்டம் என்பது யாருக்கும் கிடையாது. அவர் இருக்கும் வரை அவர் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாய்ஸ் தரமாட்டார். ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்” என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கூறினார்.