ஆந்திர மாநிலம் கடப்பா அருகே தர்காவில் சமாதி அசைந்ததாக கூறப்பட்டதால் அதைக்காண ஏராளமான கூட்டம் அலைமோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஜம்மலடுகு என்ற பகுதியில் கூடுமஸ்தான் வளி தர்கா அமைந்துள்ளது. இதில் உள்ள சமாதி ஒன்று 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது . இந்த தர்காவுக்கு மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையில் பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்க வந்திருந்தனர். இந்த சமாதி திடீரென அசைந்தததாக கூறப்படுகின்றது. அதை இளைஞர்கள் சிலர் பார்த்ததாகவும் அதை பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து அனுப்பினர். இதையடுத்து ஒவ்வொருவராக சமாதிக்கு வர ஆரம்பித்தனர். இப்படியாக பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. பக்தர்கள் அனைவரும் தங்களின் செல்போன்களில் வீடியோ எடுப்பதும் , செல்பி எடுப்பதுமாக இருந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். இரவு முழுவதும் பொதுமக்கள் அங்கிருந்து நகராமல் இருந்ததால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக வீடு திரும்பினர்.
கடந்த 2019ம் ஆண்டும் நெல்லூரில் உள்ள தர்கா ஒன்றில் தர்கா பாபா சமாதியில் இதயம் துடிப்பது போன்ற அசைவு ஏற்பட்டதாக கூறி ஏராளமானோர் குவிந்தனர் . ஏற்கனவே இதே போல சம்பவம் நடந்துள்ளது என்பது ஆச்சர்யமான உண்மையாக உள்ளது.