கோவையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ’’ திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து , கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 31.10.22ம் தேதி முழு கடையடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
26.10.22.ல் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பா.ஜ.க. அனைவருக்கும் அழைப்பு விடுத்தது. கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வெடிகுண்டு வழக்கை தேசிய புலனாய்வு முகை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார். மேலும் தீவிரவாத சதி பற்றி விரிவான பேட்டியும் அரசுக்கு இந்த வழக்கை எப்படி அணுக வேண்டும் என்று சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கியுள்ளார். அதுவரை உறக்க நிலயில் இருந்த காவல்துறையும் முதல்வரும் அதன் பின்னரே செயல்படத் தொடங்கினர்.
தீவிரவாதிகள் மீது முதல்கட்டமாக தீவிரவாத செயல்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத் தலைவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது.
எனவே மாநகர வியாபாரிகள், தொழிலதிபர்கள் , தொழில்முனைவோர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பொருளாதார நிலையை கணக்கில் கொண் மறு பரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டனர். எனவே வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டிருந்தது.