சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றோடு 7-வது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 3 வகையான ஆசிரியர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் 3 விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முக்கியமாக, அமைச்சர் அன்பில் மகேஷ் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் பலன் தரவில்லை. தமிழ்நாடு அரசிடம் போதிய நிதி இல்லை. ஆசிரியர்களுக்கு கொடுக்க இவ்வளவு நிதிதான் இருக்கிறது. அந்த நிதியை வைத்தே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த நிதிக்குள் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவு செய்கிறோம். அந்த நிதிக்கு ஏற்றபடி எவ்வளவு ஒதுக்கீடு செய்ய முடியுமோ அதை ஒதுக்கீடு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.
அதோடு நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன. மற்றொரு பக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ”பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றார்.
ஆனால், இதனை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று இரவும் விடாமல் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், சென்னையில் ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வந்த நிலையில், தற்போது அவர்கள் கைதாகி உள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதை ஏற்காமல் தொடர்ந்து ஆசிரியர்கள் போராடியதால், அவர்களின் உடல்நலம் குன்றியதாலும் நேற்று இரவு அவர்கள் இருந்த பகுதிக்கு பூட்டு போடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.