குளிர்காலத்தில் கூட ஏசி போட்டு போர்வையை நன்றாக போர்த்தி தூங்கும் பழக்கத்திற்கு பெரும்பாலானோர் ஆளாகிவிட்டனர். கோடைக்காலமும் நெருங்குகிறது. ஏசியால் கிடைக்கும் சொகுசைவிட அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். ஒரு அறையை குளிரூட்டுவதற்காக அங்குள்ள மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது. ஏசி அரை முழுவதும் சில்லென்று நிம்மதியான உணர்வை கொடுத்தாலும் நம் உடலில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால் இயல்பாகவே நமது உடல் டிஹைரேட் ஆகி நாளடைவில் பல்வேறு உடல் பாதைகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி ரூமில் அமரும்போது நீர் வற்றி போவதால் தலைவலி ஏற்படும். வறண்ட குளிர் காற்று சரும ஈரத்தையும் உறிஞ்சி விடுவதால் பொலிவிழந்த வறண்ட சருமத்தை மட்டுமே தெரியும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உடலில் ஈரப்பதம் சரியான அளவு இல்லாததால் சிலருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏசி சரியான பராமரிப்பில் இல்லையெனில் அலர்ஜி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சருமத்திற்கும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்காததால் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை விரைவில் பெறக்கூடும். ஏசி-யை சரியாக சர்வீஸ் செய்து பயன்படுத்துவதோடு 24 மணி நேரமும் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை காற்றோட்டத்தையும் அனுபவிப்பது மேம்பட்ட உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய உறுதுணையாக இருக்கும்.