கோடைக்காலத்தில் வியர்வை துர்நாற்றத்தை போக்கும் சில வழிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கோடைக்காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானவர்களுக்கு வியர்வை பிரச்னை வந்துவிடும். சிலருக்கு வியர்வையினால் உடலில் மோசமான வாடை வராது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு வியர்வை காரணமாக துர்நாற்றம் வந்துவிடும். இதனால் கூட்டமான இடத்தில் செல்வதற்கு தர்மசங்கடமாக இருக்கும்.எனவே வியர்வை நாற்றத்தை தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
குளிக்கும்போது தண்ணீரில் தக்காளியை பிழிந்து கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது. புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும். இவை மிகவும் இலகுவான மருத்துவ முறைகளாகும். உடம்பில் வெப்பம் அதிகரிக்கும்போது வியர்வை சுரப்பிகளும் அதிகம் தூண்டப்பட்டு வியர்வை பெருகும். உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு இயற்கையாக பார்த்து வைத்திருக்கும் வழி இது.
வியர்வையின் போது சிலருக்கு உடலில் நாற்றமடிக்கும். இதனை போக்கும் வழிமுறையை பார்ப்போம்: தேவையான பொருட்கள்: ரோஜாப்பூ – 1 கைப்பிடி, ஆவாரம்பூ – 1 கைப்பிடி, சந்தனத்தூள் – 1 ஸ்பூன்,
சிறுபயிறு – 1 ஸ்பூன்.செய்முறை: இவற்றை விழுதாய் அரைத்து உடம்பில் பூசிக்குளிக்க, உடம்பில் காணும் வியர்வை நாற்றம் நீக்கி, வாசனையோடு வலம் வருவீர்கள். வியர்வையைத் தூண்டும் உணவுகளை தவிர்க்கவும். ஆல்கஹால், பூண்டு மற்றும் வெங்காயம், அதிக கொழுப்பு உணவுகள், சூடான மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தினமும் இரண்டு முறை குளியுங்கள். நிறைய மோர் குடிக்கவும். உடல் குளிர்ச்சியடையும். இளநீர் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது. திராட்சைப்பழம், அதன் பழச்சாறும் 200 மி.லி. அளவில் தினமும் உட்கொள்ளவும். தனியா கஷாயத்தை குளிர்வித்து 50 மி.லி. அளவில் தினம் இருவேளை குடிக்கவும். சந்தனாதி தைலத்தை தடவலாம்.
ரோஜா (அ) ஆரஞ்சு தைலத்தை குளிக்கும் தண்ணீரில் சில சொட்டுக்கள் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும். வாசனை சோப்புகளைப் பயன்படுத்தாமல் கிருமிகளை நீக்கும் சோப்புகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள். மாதம் இருமுறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் இருக்கும் முடிகளை நீக்குங்கள். முடிகளை ட்ரிம் செய்யாமல் முற்றிலும் நீக்குவது நல்லது. அக்குளை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணியாமல் தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் விரைவில் வாடை மறையும். தினமும் குளிக்கும் போது ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து கால்மணி நேரம் கழித்து குளித்துவாருங்கள். எலுமிச்சை கிருமிகளை அழிக்கும் என்பதோடு சிறந்த மணமூட்டியாகவும் இருக்கும். நாட்டு மருந்துகடைகளில் சந்தனக் கட்டை சிறிய அளவில் கிடைக்கும். அதை வாங்கி தினமும் இரவு நேரங்களில் படுக்கும் போது சந்தனத்தை நீர் விட்டு குழைத்து அக்குளில் தடவி விடுங்கள். தினமும் இப்படி செய்துவந்தால் வியர்வை நாற்றம் மறைந்து சந்தனம் மணம் கமழும். தரமான ஒரிஜினல் சந்தனம் நல்லது அப்படி கிடைக்காதவர்கள் சந்தனப் பொடி வாங்கி ரோஸ் வாட்டரில் குழைத்து அக்குளில் பூசி வரலாம்.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் குளித்து முடித்த பிறகு கிழங்கு மஞ்சளை குழைத்து பூசி வாருங்கள். இவை வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும். தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். அக்குளில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குப் பிறகு வாரம் இருமுறை, ஒரு முறையாக மாற்றிக்கொள்ளலாம். இவை வியர்வை வாடையை நிரந்தரமாக நீக்கும். கற்றாழை வாடை என்று கூட வியர்வையை சொல்வார்கள். ஆனால் கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடை நீங்கும்.
அக்குளில் மட்டும் தனித்துவமாக இருக்கும் கருமையும் நீங்கும். வெளியில் செல்லும் போது அக்குளில் கற்றாழையை மசாஜ் செய்தும் செல்லலாம். நீண்ட நேரம் வியர்வை வாடையை வெளியேற்றாது. நன்றாக பழுத்த நாட்டுத்தக்காளியை மிக்ஸியில் அடித்து அக்குளில் தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் நாள் முழுக்க வியர்வை வாடை இல்லாமல் மகிழ்ச்சியாக உலாவரலாம். ஓய்வுநேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சந்தனப் பொடி, வெட்டிவேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, ரோஸ் வாட்டர் அனைத்தையும் குழைத்து அக்குளில் தடவி நன்றாக காய்ந்த பிறகு குளியுங்கள். பிறகு ஈரம் போக துடைத்து அதிக கெமிக்கல் இல்லாத டியோரன்டை தடவுங்கள்.
புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து அக்குளில் பூசி காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் வியர்வை நாற்றம் நறு மணமாக இருக்கும். இதை அக்குளுக்கு மட்டுமல்லாமல் கழுத்துப் பகுதியைச் சுற்றியும் பூசி வரலாம். புதினாவை நீரில் ஊறவைத்தும் குளிக்கலாம். வேப்பிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து அக்குளில் தடவி சோப்பு பயன்படுத்தாமல் குளித்து வரவும். இது நறுமணம் கொடுக்காது என்றாலும் கிருமிகளை ஒழித்து நாற்றத்தையும் கொடுக்காது. தேவையெனில் இதில் ரோஸ் வாட்டரை கலக்கலாம்.