இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கவுள்ள நிகழ்விற்கான தனது உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் சந்திர தென் துருவத்தில் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளிலிருந்து உருவாகும் அறிவியல் ஆராய்ச்சிகளை எதிர்நோக்குவதாகவும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார்.
நேஷனல் ஜியோகிராஃபிக் இந்தியா பகிர்ந்த அறிக்கையில், சந்திர ஆய்வின் முக்கியத்துவத்தை சுனிதா வில்லியம்ஸ் வலியுறுத்தினார். “நிலவில் தரையிறங்குவது நமக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்கும். விண்வெளி ஆய்வு மற்றும் நிலவில் நிலையான வாழ்வை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவை உண்மையிலேயே உற்சாகமான நேரங்கள். எனக்கு சந்திரன் மீது ஆர்வம் அதிகம், இந்த தரையிறக்கத்திலிருந்து வெளிவர வேண்டிய அறிவியல் ஆராய்ச்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், ரோவர் மாதிரிகளை எடுக்கிறது, இது ஒரு சிறந்த படியாக இருக்கும்,” ” என்று வில்லியம்ஸ் கூறினார்.
சந்திரனின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்கான இந்தியாவின் தயார்நிலையை விளக்கிய வில்லியம்ஸ், சந்திரனின் தென் துருவத்தில் நிலையான மனித இருப்பை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களைக் கண்டறிய உதவும் அறிவியல் ஆய்வுகளை நடத்தும் சந்திரயான்-3 இன் ஆற்றலை எடுத்துரைத்தார்.
சந்திராயன் -3 இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கவுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்க வைக்கும் இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மாலை 5.20 மணியளவில் தொடங்குவதாகவுள்ளது.