இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தில் வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தனது அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஜூலை மாத வாக்கில் இதேபோல நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“இதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாலினப் பாகுபாட்டை களைய பிசிசிஐ எடுத்து வைத்துள்ள முதல்படி இது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வீராங்கனைகளுக்கு சம ஊதிய கொள்கையை செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய இந்திய கிரிக்கெட் நகர்வு இது. ஆடவர்களுக்கு இணையாக மகளிருக்கும் அதே ஊதியம் வழங்கப்படும். அதன்படி, டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். இது மகளிர் கிரிக்கெட்டுக்கு எங்களது அர்ப்பணிப்பு. இதற்கு ஆதரவு அளித்த ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பதிவில் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.