பாலியல் புகார், தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சொந்தமான கைலாச தீவை வாங்கி வசித்து வருவதாக இன்று வரை கூறப்படுகிறது. ஆனால், நித்யானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் கைலாசத்தின் சரியான இடம் தெரியவில்லை. சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக யூடியூப்பில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்த இவர், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிக பணி மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் இருந்தார். அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில், 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிக்க வந்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரமக் கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக பாஸ்கரானந்தாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் நேற்று ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தார். நித்யானந்தா போல் இருப்பதால் தான் ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது விசாரணையின் முடிவிலே உண்மை என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.