மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு நிகராக கட்சி தொடங்கியவுடன் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு பெற்ற கட்சி தேமுதிக. விஜயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கட்சி தொடங்கி சந்தித்த இரண்டாவது சட்டசபை தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றியது தேமுதிக. விஜயகாந்த் உடல்நலம் குன்றிய பிறகு அக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
இதன் காரணமாக, கடந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் காலமானார். அவர் மறைந்து ஒரு மாத காலமாகியும் அவரது நினைவிடத்தில் தினமும் மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வை தன்வசம் இழுக்க தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தே.மு.தி.க. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வகித்த பாஜக தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இதனால் தற்போது பாஜக தனித்து போட்டியிடும் சூழலில் உள்ளது. இதன் காரணமாக, ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, விஜயகாந்த் அலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளதால் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் அனுதாப வாக்குகள் மூலம் பாஜவுக்கு வாக்கு வங்கி பலப்படும் என்று பாஜக கருதுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக மட்டுமின்றி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.