டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி, தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிரதான சுற்றில் இடம்பெற முடியும். எனினும் தகுதிச்சுற்றில் நமீபியா, அமீரகம், நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் இலங்கைக்கு முதல் சுற்றில் பெரிய அளவில் சவால் இருக்காது எனத் தெரிகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இளம் வீரர்களை கொண்ட மிரட்டல் படையாக உள்ளது. சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என முன்னணி அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுதவிர பயிற்சி ஆட்டத்தில் ஷானகாவின் இலங்கை அணி, ஜிம்பாப்வேயை 33 ரன்னில் வென்றது.
இலங்கை-நமீபியா அணிகள் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சந்தித்த ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன.