கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமா பள்ளி பகுதியில் ரகுமத் பீவி என்பவர் வசித்து வந்தார். இவரது மகள் ஆஸ்மியாமோள் பாலராமபுரத்தில் உள்ள ஒரு மத பாடசாலையில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆஸ்மியாமோள் சம்பவத்தன்று மதியம் 2 மணிக்கு அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு தன்னை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு சென்ற போது நிர்வாகம் மாணவியை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோர் திரும்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடசாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
அதாவது உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த போலீசார், மத பாடசாலை கழிப்பறையில் தூக்கி பிணமாக தொங்கிய ஆஸ்மியாமோள் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவளது மரணத்திற்கு அவள் படித்து வந்த பாடசாலை நிர்வாகமே காரணம் என போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பாலராமபுரம் போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.