2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் திமுக அரசின் கடைசி பட்ஜெட். இந்நிலையில் இன்று, அரசின் மாநில திட்டக்குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
அந்த ஆய்வறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த பட்ஜெட் உறுதி செய்யும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில், அதற்கான இலச்சினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹) பதிலாக ’ரூ’ என்பதை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, மும்மொழி விவகாரம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ’ரூ’ இந்த பட்ஜெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனித்தக்கது.