2024 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு, கன மீட்டருக்கு 56 ரூபாய் ராயல்டி தொகை இருந்தது. ஆனால், அதன்பிறகு ராயல்டி தொகை 90 ரூபாயாக உயர்ந்தது. இதே போன்று, கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறு கனிம நிலவரி என்ற புதிய வரியை தமிழ்நாடு அரசு விதித்தது. அதுமட்டுமின்றி, வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு மீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்ட்டியை தற்போது டன் என்று அளவுக்கு மாற்றப்பட்டது. இதனால் 90 ரூபாயாக இருந்த ராயல்டி தொகையை தற்போது 165 ரூபாயாக செலுத்த வேண்டி உள்ளது.
இதனால் புதிதாக விதித்த சிறு கனிம நிலவரி விதிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய விலையேற்றத்தின் படி, ஒரு யூனிட் ஜல்லி ஆயிரம் ரூபாய் உயர்ந்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் எம்-சாண்டு, மணல், ஜல்லி விலையை குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்-சாண்ட், பி-சாண்ட் மணல் மற்றும் ஜல்லிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருன்டு ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.