தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்பையும் இணைத்து ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும், தன்னார்வலர்களையும் கொண்டு சிஎஸ்ஆர் நிதி எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணையும் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பர். பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், அறிவியல் ஆய்வகங்கள் அமைத்தல், நூலகங்கள் ஏற்படுத்துதல், மேஜை, நாற்காலிகள், கணினிகள் வாங்கித் தருதல், பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் இந்த ’நம்ம ஸ்கூல்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.