கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்-தான் காரணம் என கருத்து பதிவிட்ட யூடியூபர் மாரிதாசு என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் மதுரையை சேர்ந்த பிரபல யூட்யூபர் மாரிதாஸ் திமுகவிற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து வருவார் அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற வகையில் பேசியிருந்தார். இவரின் பேச்சு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்று புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கம் பதிவு செய்யபட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மாரிதாஸ் மீது மேலப்பாளையத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் மாரிதாசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.