நாட்டின் 74-வது குடியரசு தின விழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதையில் அலங்காரங்கள் அணிவகுப்பு பாதுகாப்புகள் என்று சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்ககாலம் தொட்டு சமூக வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் புதிய சாதனை பெண்கள் போற்றும் விதமாக கரகாட்டம், கர்நாடக சங்கீத இசையோடு அலங்கார ஊர்தி பங்கேற்றது.
இந்த அணி வகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளை எது உங்கள் மனம் கவர்ந்தது என்று மக்கள் வாக்களிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி https://www.mygov.in/group-poll/vote-your-favorite-tableau-republic-day-2023/ என்ற இணையதளத்திற்கு சென்று மக்கள் வாக்களிக்கலாம். ஆனால், அந்த இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ் நாயுடு என பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியதால் சர்ச்சையாகி உள்ளது.