தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விரிவாக பேசினார். அப்போது, பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி, தமிழ் அறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்கள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ் அறிஞர்களுக்கு ரூ.4,500இல் இருந்து ரூ.7,500 ஆகவும், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.3,500இல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லை காவலர்களுக்கு ரூ.5,500இல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேபோல், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் இசை அரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா நாகை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார். விக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் நவம்பர் 9ஆம் தேதி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும். அரசிதழில் பெயர் திருத்தம், மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைய இணைய வழி ஏற்படுத்தப்படும். இது ஜூலை மாதம் முதல் (கியூ ஆர் கோடு வசதியுடன்) மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்று அறிவித்துள்ளார்.