சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்து இரண்டாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு பெண் குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50,000 க்கான டெபாசிட் பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம்2 குழந்தைக்கு ரூ.50,000/- க்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதல் குழந்தை பெண் குழந்தை, இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும்,மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம், 3 குழந்தைகளுக்கும் ரூ.75,000-க்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வுத்தொகை இக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் பொழுது பெறலாம்.
பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.இவ்விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது தாயாரின் மாற்றுச்சான்று, தந்தையின் மாற்றுச்சான்று, திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை பிறப்பு சான்று, 2 – ஆம் குழந்தை பிறப்பு சான்று, வருமான சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று, ஆண் வாரிசு இல்லாத சான்று, தாயார் அல்லது தந்தையின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்) மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்.
ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழிப்பத்திரம், குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.