தாமிரபரணி ஆற்றில் 45,000 கன அடி தண்ணீர் தற்போது வெளியேறி வருகிறது, தொடர் மழை பெய்தால் வெளியேறும் நீரின் அளவு உயரலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, “தாமிரபரணி ஆற்றில் தற்போது தண்ணீர் மிக அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளது, 33,600 கன அடி தண்ணீர் காலை முதல் திறந்து விடப்பட்டிருந்தது, மேலும் மழையின் அளவு தொடர்வதன் காரணமாகவும் அணையின் நீர்வரத்து அதிகமாவதன் காரணத்தினாலும், இப்போது 45,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் கொள்ளளவு 90சதவீதம் தற்போது நிரம்பியுள்ளது, அணைக்கு ஏறக்குறைய40,000 கன அடி நீர் வருகிறது. அதே போல் மணிமுத்தாறு 72சதவீதம் நிரம்பியுள்ளது, சேர்வலாறு 82சதவீதம் நிரம்பியுள்ளது, வடக்கு பச்சையாறு 86சதவீதம், நம்பியாறு 100சதவீதம் இப்போது நிரம்பியுள்ளது. அணைகள் மிக வேகமாக நிரம்பி வரக்கூடிய நிலையில் அதற்கேற்ற தண்ணீரை திறந்து விடும் நிலையில் நாம் இருக்கிறோம்.
தாமிரபரணி ஆற்றில் தற்போது 45,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று இரவு மழை தொடர்ச்சியாக இருக்குமானால், தாமிரபரணி ஆற்றில் கூடதாலக தண்ணீர் திறந்து விடவேண்டிய நிலை, அதாவது 65,000கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டிய நிலை வரும், எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. மேலும் வரக்கூடிய தண்ணீர் மிக வேகமாக வரும் என்பதால் கரையோரத்தில் இருக்க கூடியவர்கள் பாதுக்காப்பான பகுதிகளுக்கு செல்லவும். பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கு நம்முடைய மாவட்ட நிர்வாகம் ஏறத்தாழ 245 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் ஏறத்தாழ 1700 பேர் இதுவரை தங்கவைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வைகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் இப்போது வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மருத்துவ சிகிச்சையும், முதலுதவி சிகிச்சையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 101 ஜெசிபி இயந்திரங்களும், 537 நிலை மீட்பாளர்களும் இப்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், குறிப்பாக பேரிடர் மேலாண்மை துறையிலிருந்து, தேசிய பேரிடர் மேலாண்மை துறை, நம்முடைய மாநில பேரிடர் மேலாண்மை துறை மூலமாக 165 பேர் இப்போது வந்துள்ளனர், அவர்கள் மாவட்டத்தில் 3 பிரிவுகளாக பிரிக்கப்ட்டு இருக்கிறார்கள்.
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய நடவடிக்கைகளை பேரிடர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலவரம் கட்டுக்குள் உள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்து அதிகரித்தால் கரையோர மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத அளவில் முதற்கட்டமாக அங்கிருக்கு மக்களை பாதுக்காப்பாக வேறு இடத்திற்கு அழைத்து செல்வது மிக முக்கியமான கடமையாக இருக்கிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் நான் தெரிவிப்பது, தற்போது 45,000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறி வருகிறது, அது இன்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தால் அதிகளவு நீரை திறந்து விடவேண்டிய சூழல் உருவாகும், அப்படிப்பட்ட சூழல் உருவாகும்போது கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது, எனவே இதன் மூலம் நான் வேண்டிக்கொள்வது கரையோரத்தில் உள்ள அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நீங்களாகவே முன்வந்து சென்றுவிடவும், பாதுகாப்பு மிகமிக முக்கியம், ஆற்றின் தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தினால், இது தேங்கி நின்று செல்லக்கூடிய தண்ணீர் அல்ல, எனவே சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு செல்லவேண்டும்.” என்று கூறினார்