தமிழகத்தில் மது பாட்டில் விலையை தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்கவும், மூடப்பட்ட 500 கடைகளுக்கு இழப்பீடு வழங்க ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுபான விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மதுவின் விலை குவார்ட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் சில பிராண்டுகளின் விலையில் 80 ரூபாய் வரை கணிசமான உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ரம், பிராந்தி, விஸ்கி, ஜின் ஆகியவற்றின் விலையை குவார்ட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஆஃப் பாட்டிலை ரூ.20ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளன. சில பிராண்டுகளின் விலை ரூ.80 வரை உயர்த்தப்படலாம் என்றார்.மேலும், பீர் பாட்டில்களின் விலை ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளது. இது தொடர்பான கொள்கை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.
மார்ச் 2023 நிலவரப்படி, தமிழகத்தில் 4829 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்கு மாதம் 45 கோடி வரை வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.