தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாராதீப் நகருக்கு தெற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் டிகா நகரத்துக்கு தெற்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதையொட்டியுள்ள மேற்கு வங்ககடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகரக் கூடும்.
அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்று அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வரும் 26-ம் தேதி வரை தென்தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.