தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், எஸ்சி-எஸ்டி குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கும் போது கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடந்த மாதம் கட்சி ஆறு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது. தற்பொழுது கூடுதலாக சில வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி அறிவித்தார். அம்பேத்கர் அபய ஹஸ்தம் திட்டத்தின் கீழ், எஸ்சி எஸ்டி குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். மாநில அரசு ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. இதனை உயர்த்தி வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 18 சதவீதமாகவும், எஸ்டியினருக்கு 12 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இந்திரம்மா வீடு திட்டத்தின் கீழ் நிலமற்ற எஸ்சி, எஸ்டி குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ரூ.6 லட்சமும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆதிவாசி கிராம பஞ்சாயத்துக்கும் ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். ஒரு வருடத்திற்குள் 2 லட்சம் வேலை காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், வேலையில்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ 4,000 வழங்கப்படும். தெலுங்கானா தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார்.