தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்திப்பெற்ற சங்கரநாராயணர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலில் ஆடித்தபசு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் பங்குனி, சித்திரை விழா, ஐப்பசி திருக்கல்யாணம், தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் தான், நேற்று இந்த கோயிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். இதில் தான் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவிக்காக கோவில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது.
எப்படியென்றால், பொதுவாக கோவிலில் உச்சிகாலபூஜை மதியம் 12 மணியளவில் நடக்கும். பிறகு 1 மணிக்குள் நடை சாத்தப்படும். நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடியாது. மீண்டும் மாலை 4 மணிக்கு தான் நடை திறக்கப்படும். ஆனால், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாமி தரிசனம் செய்வதற்காக தாமதமாக நடை சாத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தரிசனம் முடிக்கும் வரை அர்ச்சகர்கள் நடையை சாத்தவில்லை. அர்ச்சகர்கள் காத்திருந்து சேகர்பாபு மனைவி தரிசனத்தை முடித்த பிறகு தாமதமாக நடையை சாத்தியுள்ளனர். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.