Putin: உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முயற்சிகளுக்கு நன்றி. இந்த யோசனை சரியானது. இதை நிச்சயமாக நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், இந்த போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, 30 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக்கொண்டது; அதிபர் ஜெலன்ஸ்கியும் அதை உறுதி செய்தார்.போர் நிறுத்த திட்டத்துடன், ரஷ்யாவுக்கு அமெரிக்க துாதர்கள் சென்றனர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து, ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முயற்சிகளுக்கு நன்றி. இந்த யோசனை சரியானது. இதை நிச்சயமாக நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன. நமது அமெரிக்க சகாக்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டிரம்பை அழைக்க முடிவு செய்துள்ளோம். இந்த மோதலை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.