நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் நிலவி வந்தது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதோடு லோக்சபா 2024 தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. என்றும் நன்றி_மீண்டும் வராதீர்கள்!” என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.