விமான பயணி ஒருவருக்கு அவரது தோழி அனுப்பிய குறுஞ்செய்தியால், விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
மங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ”நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்” (You Are A Bomber) என மெசேஜ் வந்துள்ளது. இதனை, அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார். இதையடுத்து, அந்த பெண் பயணி பயந்துபோய் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர், விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இறுதியில் குறிப்பிட்ட நபரின் தோழியுடனான தனிப்பட்ட உரையாடலில் அவர் மேலே குறிப்பிட்ட வார்த்தையை பயன்படுத்தினார் என்றும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் தெரியவந்தது. கடைசியில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர் 185 பயணிகளும் மீண்டும் அதே விமானத்தில், 6 மணி நேர தாமதத்திற்குப் பிறகு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.