தருமபுரி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்புக் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 13.03.2023 திங்கட்கிழமை தொடங்கி 03.04.2023 திங்கட்கிழமை வரை தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 11,507 மாணவர்களும், 11,250 மாணவியர்களும் என மொத்தம் 22,757 மாணவ, மாணவியர்களும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
இத்தேர்வுப் பணிகளில் 3500 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் பேருந்துகள் நின்று செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும் தேர்வு மையங்களை ஆய்வு செய்தல் மற்றும் பறக்கும் படை அமைத்து தேர்வுகள் புகாருக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும், தேர்வு மையங்களுக்கு போதிய குடிநீர் வசதி மற்றும் வளாகத்தூய்மை உறுதி செய்தல் வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.