டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, இது இந்திய அணிக்கு இரண்டாவது கோப்பையாகும்.
கடந்த சனிக்கிழமையே இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக அந்நாட்டு அரசு விமான நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர். அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி பார்படாஸில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். கிட்டத்தட்ட 16 மணி நேரம் இந்திய அணி வீரர்கள் விமானத்தில் பயணித்து வந்துள்ளனர். இப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு நகைச்சுவை என சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டனர்.
இந்திய அணியின் வீரர்கள் சிலர் குடும்பத்தினருடன் பிசினஸ் கிளாஸில் இருந்தனர். ஆனாலும் சூர்யகுமார் யாதவ், சாஹல், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சக வீரர்களுடன் நேரத்தை செலவிடவும் ஒருவருக்கொருவர் கேலி செய்து விளையாடவும் எகனாமிக் கிளாஸில்தான் பலமணி நேரம் செலவிட்டனர். இந்திய வீரர்கள் விமானத்தில் இருந்தபடியே தனித்தனியாக டி20 உலகக் கோப்பையுடன் படம் எடுத்துக் கொண்டனர். ரோகித் ஷர்மா, ஷாஹல் உள்ளிட்ட வீரர்கள் சிறு குழந்தைகளை போல விமானத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டுக்களும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இனிமேல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வரமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.