ஈரானின் தெற்கு டெஹ்ரானில் அமைந்துள்ள கோம் பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிச் சிறுமிகள் ஏராளமானோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில்தான், ஈரானின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூநெஸ் பனாஹி, பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோம் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் ஏராளமானோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும், பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் இதனை விரிவாக விளக்கவில்லை. இது தொடர்பாக யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதும் தெரியவரவில்லை என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில், ஈரானிய இளம்பெண் மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டு காவலில் மர்ம மரணம் அடைந்தார். இதனை கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது. இதன் பிறகே இது போன்று சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது.