தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற போகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற போகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தை போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடைபெறும் முகாம்களை அறிந்து உடனடியாக மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற முடியும்.
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேற்கண்ட கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெற கடன் வழங்கும் முகாம்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 20, 30-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 8 இடங்களில் நடக்கிறது. அல்லிநகரத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், போடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உத்தமபாளையம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று, தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, கல்விக்கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்” இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read more ; Asian Champions Trophy 2024 : மலேசியாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி..!!