குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் ISRO தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஊர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ராக்டெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்காக கடந்த 28-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கும் குறைவாக இருக்கவேண்டும். புயல், மழை தாக்கமும் குறைவாக இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்திசெய்யும் இடமாக உள்ளதால்தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது ராக்கெட்கள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இதனால் எரிபொருளும் அதிகளவில் மிச்சமாகும் என்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட்டும் என அறிவித்திருந்தனர். தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டனர். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கான கட்டிட கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் வெளியீடப்பட்டுள்ளது.
அதில், ரூ. 20.29 கோடி மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப சேவை கட்டிடம், ஏவுதள தீயணைப்பு நிலையம் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 22ம் தேதி 2.30 மணி முதல் ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் எனவும் ISRO தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read more | கை நிறைய சம்பளம்.. நீங்க பேங்க் ஆபிசர் ஆகனுமா? 6,124 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இதோ..!