மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்யும் திட்டத்தினை சென்னை எழும்பூரில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர்; ஓராண்டிற்கு மேலாக கேட்பராற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த வாகனங்கள் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுவரை 1308 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விரைவில் அப்புறப்படுத்தப்படும்.
அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் ஏலம் விடப்படும். காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனையும் அப்புறப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீது நீதிமன்ற வழக்கு ஏதாவது இருந்தால் அதனை விரைவாக முடித்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார் .