சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த 3 பேர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 பேர் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் வருகின்ற திங்கட்கிழமைக்கு இந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தோம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் உறவினர்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவும் என்கின்ற காரணத்தினால் இந்த தீர்ப்பானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற திங்கட்கிழமை வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.