நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாக வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சீமான், வருண்குமார் ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சீமான் சம்மனை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக இருவரும் ஏப்ரல் 7ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இன்றும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை. சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். இதனால், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால், சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி கடுமையாக எச்சரித்துள்ளார்.