காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த தாய், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதிக்கு 20 வயதில் குறிஞ்சி என்ற மகள் உள்ளார். இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாய்குமார் என்பவர் குறிஞ்சிக்கு பழக்கமாகியுள்ளார்.
நாளடைவில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, பேசி வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் குறிஞ்சியின் தாய்க்கு தெரியவரவே, அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத காதலர்கள் இருவரும், தொடர்ந்து நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் மல்லிகா, தனது மகளை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தனது மகளுக்கு முட்டை பொரியல் செய்து கொடுத்துள்ளார். அதில், எலி மருந்தையும் கலந்து மகளுக்கு சாப்பிட சொல்லியுள்ளார். இதை குறிச்சி சாப்பிட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து உணவில் விஷம் கலந்திருப்பதாக தாய் மல்லிகா கூறியுள்ளார்.
இதைக்கேட்டு குறிஞ்சி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, குறிஞ்சியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளை கொன்ற முயன்ற தாய் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த தாய், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.