Patna: பாட்னா மருத்துவமனையில் இறந்த நோயாளியின் கண் மாயமான நிலையில், அதை எலிகள் கடித்ததாக மருத்துவர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 14ம் தேதி, வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், பான்டஸ் குமார் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை முடிந்து சனிக்கிழமை அதிகாலையில் அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பான்டஸ் குமாரின் இடது கண் இல்லாமல் இருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் எலி பிரச்சனை உள்ளது. எலி கடித்து இருக்கலாம் என்று அலட்சியத்துடன் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வியாபார நோக்கத்தோடு மருத்துவர்கள் கண்ணை எடுத்துவிட்டார்கள் என்றும் அவரை சுட்டுக் கொன்றவர்களுடன் மருத்துவமனையைச் சேர்ந்தவர்களும் சதி செய்துள்ளனர் என்றும் மக்களின் கண்களைப் பறிக்கும் தொழிலில் ஈடுபடுவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: புரோ கபடி 2024!. பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி!.