பிரபல செய்தி தொலைக்காட்சியில் விவாதங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் பத்திரிகையாளர் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு கவனம் பெற்றது. தற்போது யு-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.
ரங்கராஜ் பாண்டேவின் தந்தையார் நேற்றைய தினம் மரணமடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், அந்த பதிவில் “என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா (ராம்சிங்ஹாசன் பாண்டே) நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன” என தெரிவித்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ராம் சிங்காசன் மறைந்ததை ஒட்டி அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.