நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம். பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம். பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.