ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேவ்புரா கிராமத்தில் வசிக்கும் ஓம் பிரகேஷ் குர்ஜார் என்னும் 38 வயதுடைய நபர் கடந்த செவ்வாய்கிழமை இந்தர்கர் நகரில் உள்ள சுமர்கஞ்ச் மண்டி சாலையில் இறந்து கிடந்தார். இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், சாலையில் இறந்து கிடந்த ஓம் பிரகேஷ் கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக ஒரு தனியார் கிளினிக்குக்கு சென்றுள்ளார். அந்த கிளினிக்கின் உரிமையாளர் ஹரியோம் சைனி (35) என்ற ஜிஎன்எம் பட்டம் பெற்ற நபர், இவர் ஒரு போலி மருத்துவர். இவர் காய்ச்சலுக்காக வந்த ஓம் பிரகேஷ்க்கு மோனோசெஃப் 500 என்ற ஊசி போட்டுள்ளார். அந்த ஊசி போட்ட உடனேயே, நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால் ஓம் பிரகேஷின் உடல் நிலை மோசமடைந்தது, சில நிமிடங்களில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஓம் பிரகேஷ்.
அதனைத்தொடர்ந்து அன்று இரவு கிளினிக்கின் உரிமையாளர் ஹரியோம் சைனி மற்றும் அவரது உதவியாளர் தீபக் உதவியுடன் ஓம் பிரகேஷ் உடலை காரில் எடுத்து சென்று இந்தர்கர் நகரில் உள்ள சுமர்கஞ்ச் மண்டி சாலையில் வீசிவிட்டு, அவரது மொபைலை இறந்தவர் கையில் வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மேலும் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் சைனி.
இறந்த ஓம் பிரகேஷ் உடல் கண்டுபிடிக்கப்பட்ட 5 நாட்களுக்கு பிறகு தான் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு போலி மருத்துவர் சைனியை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலுக்காக சென்றவருக்கு தவறான ஊசி போட்டு கொன்றது மட்டும் இல்லாமல் அவரது உடலை சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.