காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவியை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை, அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தில் வசிப்பவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). இவருக்கு சமீபத்தில் இவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், சுபாங்கி வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடமும் கூறியிருக்கிறார். இதனால், சுபாங்கிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றுபோனது. திருமணம் நின்றதால் சுபாங்கியின் பெற்றோர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சுபாங்கி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த சிலர், அவர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சுபாங்கியின் குடும்பத்தாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு சுபாங்கியை அவரது தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் ஆகியோர் வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து அங்குள்ள கால்வாயில் சாம்பலை கரைத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த லிம்காவ் காவல்துறையினர் அந்த பெண்னின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணா, கோவிந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.