இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் தற்போது வெங்காய சாகுபடி அதிகமாக இருக்கிறது. வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் பெரும்பாலும் சோலாப்பூர் வேளாண் உற்பத்தி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப்படும். அந்தவகையில், சோலாப்பூர் மாவட்டத்தின் போர்கான் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான், அறுவடை செய்த 512 கிலோ வெங்காயமும் அங்கிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அந்த ஏலத்தில் சவானின் வெங்காயம் தரம் குறைந்து இருப்பதாக கூறி கிலோ 1 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, 512 கிலோவுக்கு ரூ.512 என கிடைத்தவரை போதும் என்ற எண்ணத்தில் அந்த பணத்தை பெற நினைத்தார். ஆனால், வெங்காயம் ஏற்றி வந்ததற்கான வண்டி கூலி ரூ.509.51 கழிக்கப்பட்டு மீதம் 2 ரூபாய் 49 காசுகள் இருப்பதாக பில்லை கொடுத்ததால் பேரதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த பணத்தையும் ‘செக்’காக மட்டுமே கொடுத்துள்ளனர். அதிலும் என்ன ‘டுவிஸ்ட்’ என்றால் அந்த 2 ரூபாயும் உடனடியாக எடுக்க முடியாதாம். 15 நாட்களுக்கு பிறகே வங்கி மூலமாக பெற முடியும் என்றும் தேதியிட்டு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சவான் கூறுகையில், ‘கடந்த 3, 4 ஆண்டுகளாக விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது. சந்தைக்கு கொண்டு வந்துள்ள 512 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்’ என வேதனையுடன் கூறினார். சந்தையில் இந்த வெங்காயத்தை ஏலம் எடுத்த வணிகர், ‘இந்த வெங்காயம் தரமற்றதாக இருப்பதால் இவ்வளவு குறைந்த விலையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார். ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து வெங்காயம் அறுவடை செய்த விவசாயிக்கு ரூ.2 செக் கொடுத்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.